செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கத்தில் கட்டடங்கள் எழுப்பி, சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், ஏரி புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டியதாகக்கூறி, அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன் என்பவர் உள்பட 154 பேருக்கு தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டன.
இந்த நோட்டீஸ்களை ரத்து செய்வதோடு, பட்டா வழங்கக்கோரியும், தாங்கள் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கக் கோரியும், தாமோதரன் உள்பட 154 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் மின்னணு ஆவணங்களின்படி இந்த நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் எனவும், ஏரி புறம்போக்கு நிலம் என பொதுப் பணித் துறை கூறுவது தவறு எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸ்க்குப் பதிலளித்ததோடு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்தும் பதிலளித்துள்ளோம் என்றும், கரோனா, பருவ மழை காலங்களைக் கருத்தில் கொண்டு, பொதுப் பணித்துறை நோட்டீஸ் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையிலேயே, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கு மனுதாரர்கள் அளிக்கும் விளக்கங்களை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கப்படும் எனவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுப் பணித்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு மனுதாரர்கள் அளித்த பதில் மற்றும் அவர்களின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து நான்கு வாரங்களுக்குள் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை பொதுப் பணித்துறை அனுப்பிய நோட்டீஸ் மீதான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனக்கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.