சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசு விதித்த தடையை உறுதி செய்து உத்தரவிட்டு, சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த அமர்வு விசாரித்து வருகிறது.
இதனிடையே, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளின் துறைகள், ரயில்வே, மாவட்ட நிர்வாகங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் பால் நிறுவனம் ஆகியவற்றிற்கு நீதிபதிகள் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். அவற்றில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆராய்ந்து, தகுந்த அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (அக்.9) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகளால் பட்டாசுகளை பேக்கிங் செய்யாமல் இருக்க தமிழக அரசு ஏதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, அரசுத் தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், நேரடி கடைகளில்தான் விற்பனை தொடங்கவில்லையே தவிர, ஆன்லைனில் ஆர்டர்கள் எடுக்கப்பட்டு, பட்டாசுகள் பேக்கிங் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீதான சொத்து வழக்கு அக்.19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!