சென்னை : தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம்
இந்தச் சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்தது.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சட்டப்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற போதும், நிதி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வங்கிகளிடம் உதவி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது எனவும் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகளுடனான பேருந்துகளின் விலை குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க : அரசுப் பேருந்துக்குள் மழை - குடையுடன் ஊர் சென்ற பயணிகள்