சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா என்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கரோனில் 92 பி’, ‘கரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கரோனில் என்ற பெயருக்கு வணிகச் சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த வணிகச் சின்னம் 2027ஆம் ஆண்டு வரை அமலில் உள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு கரோனில் என பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறி, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக ஆருத்ரா என்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், கரோனில் பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வணிகச் சின்ன பதிவுத்துறையில் கரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால் கரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் பார்க்க முயற்சித்ததாக அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை, எந்தவித அங்கீகாரத்தையும் தேடாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கரோனாவை குணப்படுத்தாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'எங்க மருந்து கரோனாவைக் குணப்படுத்தும்னு நாங்க சொல்லவே இல்லையே' - பதஞ்சலி அந்தர்பல்டி