சென்னையில் மாநில உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து நடத்தும் மதராசபட்டினம் விருந்து என்கிற பாரம்பரிய உணவு திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவிற்கான லோகோவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து பொதுமக்களிடம் பாரம்பரிய உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மதராசபட்டினம் விருந்து திருவிழா நடைபெற உள்ளது. நல்ல தரமான பாரம்பரிய உணவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பாரம்பரிய உணவுகளை மறக்காமல் அதன் நலனை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
தொற்று நோய்களை தவிர்க்க மக்கள் நல்வாழ்வுத் துறை எடுத்திருக்கும் ஒரு புதிய முயற்சியாக இந்த திருவிழா நடைபெற உள்ளது. தொற்று நோய்கள் வராமலிருக்க பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுத் திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் பாரம்பரிய உணவுகளை தயாரித்தல் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. முக்கியமாக உணவுப் பொருட்களில் கலப்படத்தை எளிமையாக எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து இந்தக் கண்காட்சியில் விளக்கப்படும் எனத் தெரிவித்தார்.