சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, இந்திய மருத்துவத்துறை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் பல்வேறு அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி யோகா, இயற்கை மருத்துவம் போன்ற ஐந்து வகையான மருத்துவத்திற்கும் கல்லூரிகள் உள்ளன.
யோக மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பில் இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளும் உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு தனி கல்லூரிகளை தொடங்கினார். மேலும், 2006 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் மூலம், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடிய 36 பூங்காக்களில் யோகா மேடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இலவசமாக யோகா செய்யும் முறை கொண்டுவரப்பட்டது.
மாணவர்கள் மற்றும் தாய்மார்களுக்கு யோகா: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் யோகா பயிற்சி பாடத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டது. மகப்பேறு மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் வரும் தாய்மார்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதனால், தாய்மார்கள் சுகப்பிரசவம் அடைந்தனர். இந்த முறை தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மசோதா நிலை : தமிழ்நாட்டிற்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்று வேண்டும் என்கிற வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அதற்கான மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். ஆளுநர் அந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்கிறார் என்பதால் அனுமதிக்க முடியாது எனவும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஏற்கனவே மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தவுடன் அதனைத் தொடங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது. பல்கலைக்கழகத்திற்கான நிர்வாக அலுவலக கட்டிடம் அறிஞர் அண்ணா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதேபோல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 25 ஏக்கர் நிலம் வேறு துறையிடமிருந்து மருத்துவத்துறைக்கு பெறப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைந்தது என்ற பெருமை கிடைக்கும்” எனக் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை நாலு மணிக்கு அறுவை சிகிச்சைக்கான பணிகள் தொடங்கியது. தற்போது சிகிச்சை முடிந்து, மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். மூன்று ரத்த நாளங்களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தான் அவருக்கு சுய நினைவு வரும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று தான் அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் எத்தனை நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தான் கூற வேண்டும்” என்றார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 அடைப்புகளை இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர்கள் ரகுநாதன் தலைமையிலான குழுவினர் அகற்றி உள்ளனர் எனவும், மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து அமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிறப்பு மருத்துவ முகாம்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெரும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை தவிர 37 மாவட்டங்களில் 90 இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ள இந்த மருத்துவ முகாம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் இணைந்து நடத்தப்பட உள்ளது. மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும் மேலும் மருத்துவ முகாமில் அனைத்து வகையான சிகிச்சைகளும் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
மத்திய அரசிடம் 30 செவிலியர் கல்லூரிகள் வேண்டுமென கோரிக்கை வைத்ததால், 11 கல்லூரிகள் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாகவும், அப்போது யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: International yoga day: 2 நிமிடங்களில் 40 வகையான யோகாசனங்களை செய்து அசத்திய சிறுமி