குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் இந்தப் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. அப்போது பேருந்துகள் எரிக்கப்பட்டன, ஏராளமான மாணவர்கள் காவல் துறையினரால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தினுள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரிய பதாகைகளை ஏந்தி, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், ”இந்தியாவில் மாணவர்கள் எங்கு தாக்கப்பட்டாலும் அது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும் குடியுரிமை சட்டத்திருத்தத்தின் மூலம் இன, மத பாகுபாடுகளை மாணவர்களிடையே காட்ட வேண்டாம் எனவும் இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பேருந்தை கொளுத்த போலீஸ், மாணவர்களை அடிக்க அடியாட்கள்!