திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நாள் ஒன்றிக்கு 1,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, பால்வளத்துறை அமைச்சரும், மாவட்ட தொற்று தடுப்பு நடவடிக்கை குழு தலைவருமான ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, தற்போது மாவட்டத்தில் தொற்றின் எண்ணிக்கை 400க்கு கீழ் குறைந்து வருகிறது. மேலும், தொற்றால் இறப்பு எண்ணிக்கையும் குறைந்தது. இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி மாநகராட்சியில் இரு வாரத்திற்கு முன்பு தொற்றின் எண்ணிக்கை தினசரி 550ஐ கடந்து வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து, அங்கும் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடிக்கடி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, மாநகராட்சி பகுதியில் உள்ள 48 வார்டுகளிலும் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியில் 384 பேர் ஈடுபட்டனர். தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து, வைட்டமின் டானிக், கபசுர பவுடர் அடங்கிய மருந்து பெட்டகம் அளித்து வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு ஆகியவற்றையும் வழங்குகின்றனர்.
பாதிப்பு உள்ளான தெருக்களில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பல இடங்களில் 20பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தற்போது ஆவடி மாநகராட்சியில் நேற்று (ஜுன் 9) நிலவரப்படி தொற்றின் எண்ணிக்கை 35ஆக குறைந்துள்ளது. மேலும், கடந்த ஒரு வாரமாக தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்