தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று(மே.2) வெளியாகின. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என, ஐந்து முனை போட்டி நிலவியது.
மாநிலத்திலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானதில், பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக, மாநில கட்சியுடன் இணைந்து பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. கடந்த 1980 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்தத் தலைவர் அத்வானி ஆகியோர் இணைந்து, பாஜக-வை உருவாக்கியபோது, திராவிட முன்னேற்ற கட்சியின் வயது 31. அத்தருணத்தில் அதிமுக உருவாகி எட்டு ஆண்டுகள் கடந்திருந்தன.
தேசியக் கட்சியாக பாஜக உருவெடுத்து வந்தபோது, தமிழ்நாட்டில் அக்கட்சியிலிருந்த ஒரே எம்எல்ஏ வேலாயுதம் தான். கடந்த 1996ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்குச் சென்ற முதல் பாஜக எம்எல்ஏ.வும் ஆவார். அதன்பிறகு, முதல் முதலாக கடந்த 2001ஆம் ஆண்டு மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது பாஜக. திமுகவுடன் கூட்டணி அமைத்த அந்தக் கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அத்தேர்தலில் 4 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. அன்றைய தேர்தலில், பாஜகவின் வாக்கு சதவீதம் 38.68 ஆக இருந்தது. மயிலாடுதுறையிலிருந்து ஜெகவீர பாண்டியன், காரைக்குடியிலிருந்து ஹெச்.ராஜா, மைலாப்பூரிலிருந்து கே.என்.லக்ஷ்மணன், தளி தொகுதியிலிருந்து கே.வி.முரளிதரன் ஆகியோர் பாஜக எம்எல்ஏ-க்களாக சட்டப்பேரவைக்குள் சென்றனர்.
![நயினார் நாகேந்திரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11615816_nn.jpg)
அதன்பிறகு 2006, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்களில், பாஜக தனித்தே போட்டியிட்டது. வாக்கு சதவீதமும், தேர்தலுக்குத் தேர்தல் தலா 3 சதவீதம் குறைந்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலக் கட்சியுடன் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலை பாஜக எதிர்கொண்டது. இம்முறை அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது.
ஏற்கனவே, கடந்த 1998ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைந்தது. ஆனால் அந்த கூட்டணி நீடிக்கவில்லை. ஓராண்டு ஒரு மாதங்களில் (13 மாதங்களில்) முரண்பாடு ஏற்பட்டு, அக்கூட்டணியிலிருந்து வெளியேறி, அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசு ஜெயலலிதாவால் கவிழ்க்கப்பட்டது. அதன்பிறகு பாஜகவுடன் அவர் கூட்டணி அமைக்கவில்லை. தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்தும் வந்தார் ஜெயலலிதா.
![எம்ஆர் காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11615816_mr.jpg)
ஜெயலலிதா உயிரிழந்த பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்தது. ஆனால், வெற்றி அமையவில்லை. அதன்பின்னர், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே பாஜக தொடர்ந்தது.
அக்கட்சிக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. இம்முறை இரட்டை இலக்க எண்களை கைப்பற்றி, சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்கிற முனைப்பில், மாநிலத் தலைவர் தலைமையில் தீவிரம் காட்டியது. கந்தசஷ்டி கவச விவகாரம், வேல் யாத்திரை இவையெல்லாம் பாஜகவின் பலமாக பார்க்கப்பட்டதால், இம்முறை இரட்டை இலக்கங்களில் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ-க்கள் இடம்பெறுவார்கள் என்றும் அக்கட்சி நம்பியது.
![lotus-blossoms-in-tamilnadu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11615816_vs.jpg)
அதன்படி, தற்போது நாகர்கோவில், திருநெல்வேலி, மொடக்குறிச்சி, கோவை தெற்குத் தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, 4 எம்எல்ஏக்களுடன் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் பாஜக நுழைகிறது.
பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார். முன்னிலை, பின்னடைவு என்று மாறி, மாறி தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்காலிகமாக அவரது தொகுதி முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைக்குள் நுழையும் பாஜக வேட்பாளர்கள்:
நாகர்கோவில்- எம்ஆர் காந்தி
பெற்ற வாக்குகள் 85725
வானதி சீனிவாசன்- கோவை தெற்கு
பெற்ற வாக்குகள்- 53709
திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன்