வட சென்னைக்குள்பட்ட பகுதிகளில் அதிக அளவில் ஒரு நம்பர் லாட்டரி வழங்குவதாக வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் விஜய், தலைமை காவலர் முருகேசன், காவலர்கள் விமல் மற்றும் அருண்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து ஜேவிஎம் என்ற எழுத்தை மட்டும் குறிப்பிட்டு தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
அப்போது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜேவிஎம் லாட்டரி என்ற பெயரில் ஒருவர் கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போன் எண்ணை வைத்து சோதனை மேற்கொண்டதில், தண்டையார்பேட்டை பகுதியில் இருப்பது கண்டறிப்பட்டது.
பின்னர், இரண்டு நாள்கள் தண்டையார்பேட்டை முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்ட தனிப்படையினர், கும்மாளம்மன் கோயில் பகுதியில் இருந்த ஜேபிஎம் என்ற செல்வமணியை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மூன்று மாநிலங்களைச் சேர்ந்த லாட்டரிகள், கேரளா பம்பர் லாட்டரி ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது மகளை வைத்து பூட்டான் லாட்டரி என்ற பெயரில் அங்கு விற்கப்படும் லாட்டரி நம்பரை வைத்து வட சென்னையில் விற்பனை மேற்கொண்டு வந்துள்ளார்.
செல்வமணியிடமிருந்து பத்துக்கும் மேற்பட்ட நோட்டுப் புத்தகங்களையும் குறியீட்டு எண்களையும் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், அவரை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.