விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நம்பர் லாட்டரியில் பணத்தை இழ்ந்தார்.
இந்நிலையில், மனைவி, மூன்று பெண் குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் திங்கள்கிழமை(ஜூலை 27) செய்தித்தாளில் லாட்டரி விற்பனை குறித்து விளம்பரம் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2003ஆம் ஆண்டு லாட்டரி விற்பனை தடை செய்த பிறகும், இது போன்று ஒரு நம்பர், இரண்டு, மற்றும் மூன்று நம்பர் லாட்டரிகள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் சிலர் ரகசியமாக நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்து ஆன்லைனில் அதன் முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு என்பதாலும், மக்களின் பணத் தேவை, எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையை அறிந்து கொண்டு வெளிப்படையாக லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து விளம்பரம் செய்யப்படுகின்றன.
தாம்பரத்தில் செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தில் தங்கம் லாட்டரி என்ற பெயரில் முதல் பரிசு 1 லட்சம், இரண்டாம் பரிசு ஐந்து ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே லாட்டரி விற்பனை நடத்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களே மீண்டும் ஏஜென்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நம்பர் லாட்டரிகளை வாங்கி பொதுமக்கள் ஏமாறுவதாக புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும் காவல் துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!