சென்னை காசிமேட்டில் உள்ள சென்னை துறைமுகம் பூஜ்ய நுழைவு வாயில் பகுதியில் அனைத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கோபிநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "சென்னை துறைமுகத்திலிருந்து தினமும் 1000க்கும் அதிகமான கண்டெய்னர்கள், லாரிகள் மூலமாக உள்ளேயும் வெளியேயும் எடுத்துச் செல்லப்படுகின்றன. முதலில் ஒரு லாரிக்கு போக்குவரத்து துறை நிர்ணயித்த எடையை விட இருமடங்கு மும்மடங்கு எடை லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்படுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
நேற்று (அக். 26) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடந்த விபத்தும் இதேபோல அதிகளவில் எடை ஏற்றிக்கொண்டு சென்றதால்தான் ஏற்பட்டது.
லாரிகளில் அதிக எடையை ஏற்றிக் கொண்டு செல்வதால் சாலையில் திடீர் பள்ளம், இதர தேவைகளுக்கு பிரேக் பிடிக்கும்போது வண்டி நிற்காமல் செல்லும். இதனால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படும். இதைத் தடுக்க துறைமுக பொறுப்பு கழக அலுவலர்கள் முறையாக ஒரு லாரியில் எந்தளவு எடை ஏற்ற வேண்டுமோ அந்த அளவு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
துறைமுக பொறுப்புக் கழகத்தினர் வருமான லாபத்திற்காக இதுபோன்ற அதிக எடையுள்ள பொருள்களை லாரியில் ஏற்றுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க... வாகனம் மோதி பெண் புள்ளிமான் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை!