சென்னை பல்லாவரம் அடுத்த கெளவுல் பஜார் மாங்கலி அம்மன் கோவில் தெருவில் வசித்துவருபவர் ஈஸ்வரன் (41). இவர் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவரது மனைவி ஈஸ்வரி (36). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மதுரையில் உள்ள உறவினர் ஒருவர் புதுமனை புகுவிழாவிற்கு ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்துள்ளார்.
ஆனால், ஈஸ்வரன் பணிசெய்யும் நிறுவனத்தில் அவருக்கு விடுமுறைத் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரின் மனைவி, குழந்தைகளை மட்டும் மதுரைக்கு அனுப்பிவைத்துள்ளார். இதையடுத்து, நேற்று (அக். 25) இரவு வீட்டிற்கு வந்த ஈஸ்வரன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
இன்று (அக். 26) காலை வீட்டிலிருந்து ஈஸ்வரன் நீண்ட நேரம் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் கருப்பண்ணன் தலைமையில் விரைந்து சென்ற காவலர்கள், உடலை மீட்டு உடற்கூராத்ய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்குச் செல்வதற்கு, அவர் பணிபுரிந்த நிறுவனம் விடுமுறை அளிக்காததால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.