சென்னை: பல்லாவரத்தில் வசித்து வருபவர் டாக்டர் மேகசியான் (வயது 33). இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தாரணியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (நவ. 3) பல்லாவரம் ரேடியல் சாலையில், துரைப்பாக்கம் நோக்கி சென்று கொண்டு இருந்த டாக்டர் தம்பதியினரின்கார் மீது லாரி லேசாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர் மேகசியானுக்கும், லாரி டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து இருவரும் தங்களின் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது டாக்டர் மேகசியான், பல்லாவரம் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து உள்ளார். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லாரி டிரைவர் லாரியை எடுத்துக் கொண்டு தப்பித்து செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதை கண்ட தம்பதியினர் லாரியை மடக்கி காவல் துறையினர் வந்ததும் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றி லாரி டிரைவர் தம்பதியினரை தகாத வார்த்தையால் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: காடு, மலை கடந்து பயணம்... வாழ்வாதாரத்திற்காக அல்ல.. ஜனநாயக கடமையை நிறைவேற்ற!
மேலும், ஆத்திரமடைந்த லாரி டிரைவர், டாக்டர் மேகசியானை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்து உள்ளனர். அப்போது லாரி டிரைவர், வீடியோ எடுத்தவரை மிரட்டி செல்போனை பறிக்க முயற்சித்து உள்ளார்.
இதற்கிடையில் பல்லாவரம் போலீஸார் சம்பவ இடதிற்கு வந்து டாக்டர் மற்றும் லாரி டிரைவர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், லாரி ஓட்டுநர் சதீஷ் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் சந்துரு மீது மருத்துவரை கையால் தாக்கியது,கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசியது என மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது டாக்டர் தம்பதியினரை நடுரோட்டில் வைத்து லாரி ஓட்டுநர் தாக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!