சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதிச்சீட்டு பெற்றவர்களைத் தவிர வேறு யாரும் வாக்குச்சாவடியில் நுழைய தடை என ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,
- உள்ளாட்சி அமைப்புகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
- அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்குப்பதிவு அமைதியாகவும் எவ்வித அச்சுறுத்தலும், இடையூறுமின்றி முழுச் சுதந்திரத்துடன் வாக்காளர்கள் தங்கள் வாக்கினைச் செலுத்த ஒத்துழைக்க வேண்டும்.
- வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரம் தள்ளி அரசியல் கட்சிகளால் அமைக்கப்படும் முகாம்களில் தேவையில்லாமல் அதிகமான நபர்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதிச்சீட்டு பெற்றவர்கள் தவிர வேறு எவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது.
- தேர்தல் நடைமுறையைக் கண்காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
- வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் தேர்தல் நடத்துவது தொடர்பாக புகார் அல்லது பிரச்சினை ஏதுமிருந்தால் தேர்தல் பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.
- வாக்குச்சாவடிக்குச் சென்றுவர வாக்காளர்களுக்கு இலவசப் பயணம் ஏற்பாடு செய்யும் வகையில் வேட்பாளரோ, அவரது முகவரோ அல்லது அவர்களது ஒப்புதலோடு வேறு எந்த நபரோ வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதும், சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதும் தமிழ்நாடு ஊராட்சி சட்டங்களின்படி (பிரிவு 68) தேர்தல் குற்றங்களாகும்.
- ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப்பதிவு நாளன்று தமது சொந்த உபயோகத்திற்காக ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அவர் போட்டியிடும் பதவிக்குத் தொடர்புள்ள பகுதியில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள தகுதியுடையவராவார்.
- வேட்பாளர் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் வாகனத்தை வாக்குப்பதிவு நாளன்று வேறு எந்த நபரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
- இந்த வழிகாட்டுதல்களை மீறி பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல்செய்யப்படும்.
- வாக்காளர்கள், வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வ கடிதம் அளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே எந்த வாக்குச்சாவடிக்குள்ளும் நுழைய முடியும்.
- எந்த ஒரு அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் எந்த வாக்குச்சாவடிக்குள்ளும் நுழையக் கூடாது. ஆனால், அவர் வாக்களிப்பதற்காக வாக்காளராக நுழையலாம்.
- அலுவல்சார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ஒரு நபர் வாக்காளராக இருக்கும்பட்சத்தில், தான் வாக்களிக்கச் செல்வதைத் தவிர, பாதுகாவலர்களுடனான தனது நடமாட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் - அக்டோபர் 4ஆம் தேதி வழங்க முடிவு