சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15 - வேட்புமனுத் தாக்கல்,
செப்டம்பர் 22 - மனுத்தாக்கல் கடைசி நாள்,
செப்டம்பர் 23 - வேட்புமனு பரிசீலனை,
செப்டம்பர் 25 - வாபஸ் பெற கடைசி நாள்,
அக்டோபர் 6,9, - வாக்குப்பதிவு,
அக்டோபர் 12 - வாக்கு எண்ணிக்கை,
நேரடித் தேர்தல்கள்
மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
முதல் கட்ட வாக்குப்பதிவில் 78 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 12,652 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
நான்கு விதமான வாக்குச்சீட்டுகள்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும். கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
நடப்பு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டு ஆன்லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 524 ஆண் வாக்காளர்களும் 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்களும் 835 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 76,59,720 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
171 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 3,777 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்குப்பெட்டிகள்
9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச் சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6,652 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் சுமார் 41,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.
மறைமுகத் தேர்தல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோருக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
பாதுகாப்பு
இன்று முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
வாக்கு சாவடி மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 40 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் வைப்பு தொகை
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.200,
கிராம ஊராட்சி தலைவர் - ரூ.600,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - ரூ.600,
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.1000,
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வைப்புத் தொகை
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.100,
கிராம ஊராட்சி தலைவர் - ரூ.300,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - ரூ.300,
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.500,
தேர்தல் செலவினங்கள்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 9,000,
கிராம ஊராட்சி தலைவர் - ரூ.34,000,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - ரூ.85,000,
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.1,70,000,
வேட்பாளர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.
வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் கரோனா நோயாளிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: 'இரு சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டுமே வசூல்' - தேசிய நெடுஞ்சாலை ஆணையம்