சென்னை சைதாப்பேட்டையில் கனரா வங்கியுடன் இணைந்து சிண்டிகேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2015ஆம் ஆண்டு அரக்கோணத்தைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் (42) வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தனி நபர் கடன், முத்ரா கடன், இருசக்கர வாகனக் கடன் என சுமார் 3 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாக பெற்றுள்ளார்.
பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்தாமல் தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். இதனால் ஜோசப் செல்வராஜ் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்த போது போலியான வருமான வரி சான்றிதழைக் கொடுத்து வங்கியை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிண்டிகேட் வங்கியின் மேலாளர் சௌமியா மத்தேயு, இதுகுறித்து காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வங்கி மோசடி தடுப்புப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜோசப் செல்வராஜை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
விசாரணையில் அடிக்கடி ஜோசப் செல்வராஜ் அரக்கோணத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வது தெரியவந்தது. உடனே தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று ஜோசப் செல்வராஜை அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் ஜோசப் செல்வராஜை சென்னைக்கு அழைத்துச்சென்று இதேபோன்று வேறு வங்கியில் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக போலியான ஆவணங்களைக் கொண்டு வங்கியில் கடன் பெறும் நபர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக கையெழுத்திடும் நபர்கள் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற நபர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டாம் எனவும் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு காலத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பலே திருடன் கைது!