சென்னை: தமிழ்நாட்டில் 2381 நடுநிலைப் பள்ளியுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி யூகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறையால் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது. இந்த அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறையின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் கற்பித்தல் பணிகள் குறித்து அலுவலர் ஒருவர் கூறும்போது, ’தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி மையங்களில் சுமார் 25 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் காலை 8.30 மணிக்கு அங்கன்வாடி மையங்களுக்கு வருவார்கள். மாணவர்கள் வருகைபுரிந்த உடன் சத்தான உணவை அளிக்கும் வகையில், உருண்டைப் பிடித்து தர வேண்டும். அதன் பின்னர் கஞ்சி வைத்து தர வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் மூலம் தயார் செய்து தரப்பட்டுள்ள புத்தகங்களில் இருந்து தமிழ்வழியில் கல்வியை கற்பிக்க வேண்டும். அங்கன்வாடியில் பணியாற்றுவதற்கு 10ஆம் வகுப்பு தகுதிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு மாண்டிச்சேரி பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அவர்கள் தமிழ் வழியில் கல்வியை கற்பிப்பர். ஆங்கிலம் அடிப்படையில் கற்பிக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 வயது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை சேர்த்து வருகிறோம். அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பரிசோதனை முறையில் மட்டுமே தொடங்கினோம்.
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆங்கில வழியில் கல்வி கற்பித்தோம். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் எடுத்துக்கொண்டனர். எனவே அங்கன்வாடி மையங்களில் ஏற்கெனவே உள்ள நடைமுறையில் மாணவர்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு, கற்பித்தல் பணிகள் நடைபெறும்’ என சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, ’கடந்த 3 ஆண்டிற்கு முன்பாக சமூக நலத்துறையின் மூலம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்டது. தற்பொழுது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளைத் தொடங்கி ஆங்கில வழியில் கல்வியை அளிக்க வேண்டும். அப்போது தான் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். ஆங்கில வழிக்கல்வியில் 3 வயதில் மாணவர்களை சேர்த்து விடுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கிறது. எனவே அரசுப்பள்ளிகளில் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்து ஆங்கில வழி வகுப்புகளை தொடக்க வேண்டும்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரி போராடிய 487 செவிலியர்கள் மீது வழக்கு!