நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயத்தில், தேமுதிகவின் நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்து பேசினர்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், கூட்டணி குறித்து தன்னிடம் தேமுதிக நிர்வாகிகள் பேசியதாகவும், ஆனால் அவர்களுக்கு கொடுக்க தங்களிடம் சீட்டு இல்லை என்றார்.
இதனையடுத்து ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி பேரம் பேசும் தேமுதிக என பல்வேறு தரப்பினர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
இந்நிலையில், எல்.கே.சுதீஷ், தேமுதிக சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அனகை முருகேசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுதீஷ் பேசுகையில், ”நாங்கள் முதன்முதலாக பாஜகவுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிமுகவுடன் பேசுமாறு பாஜக கூறியதால் தாமதமாக அதிமுகவுடன் பேசினோம்.
பாமகவுடன் உடன்பாடு ஏற்பட்டபோது தேமுதிகவுடனும் அதிமுக பேசியிருக்கலாம் என்ற வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தோம். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுதீஷ், “ தேமுதிக நிர்வாகிகள் அவரை தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்தனர். நான் 10 நாட்களுக்கு முன் துரைமுருகனிடம் பேசினேன்.
நேற்று நான் அவரிடம் பேசவில்லை. துரைமுருகன் அவரின் கட்சி குறித்தும், தலைமை குறித்தும் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? அதை வெளியில் சொன்னால் அசிங்கமாகிடும் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் மற்றும் அனகை முருகேசன், “துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் சந்தித்தோம். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அவர் பொய் சொல்கிறாரா என்பது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும்” என்றனர்.