சென்னை பெசன்ட் நகரில் ரத்தினம் என்பவர் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பதாக சாஸ்திரி நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ரத்தினம் வீட்டிற்குள் புகுந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரத்தினத்தை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். உடனே ரத்தினம் மனைவி உஷா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி கணவரை கைது செய்யக் கூடாது என தெரிவித்தார். ஆனால் காவல் துறையினர் ரத்தினத்தை கைது செய்ததால், உஷா தன் மீது தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து காவல் துறையினர், அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபான வியாபாரி ரத்தினத்தின் மனைவி உஷா அடிக்கடி கைது நடவடிக்கையின்போது, நிர்வாணமாக ஓடுவதும் தற்கொலை முயற்சி செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
ரத்தினத்தின் மீது அடையாறு காவல் நிலையத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மதுவிலக்கு பிரிவில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கணவருடன் தகராறு - மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி