தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், "2003ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும். விலை பட்டியலை கடைகளில் ஒட்ட உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு நிர்ணயித்த விலையில்தான் (MRP) மதுபானங்கள் விற்கப்படுகிறதா, மதுபானங்கள் விற்கும் போது ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா, ஒவ்வொரு மதுபான கடையிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா, அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விளக்கம் அளிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
அதற்கு பதில் அளித்த டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தாக்கல் செய்த மனுவில் "தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் எந்த மீறல்களும் இல்லை. உயர்த்தப்பட்ட மதுபான விலை விவரங்கள் அந்தந்த கடைகளில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க திடீர் சோதனைகள் நடத்தும்படி மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க அவர்களும், பறக்கும்படையும் மாதம் ஒருமுறை சோதனைகள் நடத்தி வருகின்றனர். அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
மேலும் கடை ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். தொடர்ச்சியாக இக்குற்றத்தில் ஈடுபடுவோர் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அப்படி 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை தொடர்பாக சென்னையில் 2,129 வழக்குகளும், கோயம்புத்தூரில் 1,487 வழக்குகளும், மதுரையில் 2,422 வழக்குகளும், சேலத்தில் 1,365 வழக்குகளும், திருச்சியில் 1,916 வழக்குகளும் என 9 ஆயிரத்து 319 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் நிர்வாகம் தமிழ்நாட்டில் 18 மதுபான ஆலைகளிடமிருந்து மதுபானங்களை கொள்முதல் செய்துவருகிறது. அந்த ஆலைகள் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றவை. மதுபானங்கள் தரமாக இருக்கிறதா? என ஆய்வு செய்ய ஒவ்வொரு மதுபான ஆலைக்கும் கலால் வரித்துறை மேற்பார்வை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஆலையின் அன்றாட நடவடிக்கைகளை அவர் கண்காணிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகத்தின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'டாஸ்மாக் பாதுகாப்பிற்காக காவலர்களா?': தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு