சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த ஆளுநரின் கருத்திற்கு சட்டத்துறை வல்லுனர்களின் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகைக்கு உயர் கல்வித்துறை மீண்டும் கடிதம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கடிதத்தை உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் தமிழக ஆளுநருக்கு விரைவில் அனுப்பி பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை அமைக்க வலியுறுத்துவார் என தெரிகிறது. மேலும், ஓராண்டுக் காலமாகத் துணைவேந்தர் இல்லாத கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் கடந்த மாதம் காலியான சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என ஆளுநரின் நிபந்தனையால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் போன்ற பிரச்சனைகள் குறித்து கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுமட்டும் அல்லாது, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் படி மாநில பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தரை நியமிக்க பல்கலைக்கழக விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை இது போன்ற விதிமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி சட்ட வல்லுநர்களின் கருத்தும் பெறப்பட்டு இந்த கடிதத்தில் இனைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுது இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரும், இணை வேந்தருமான பொன்முடி மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் அனைவரும் கலந்து கொண்டனர். அப்பொழுது துணைவேந்தர் நியமனம் குறித்த கடிதத்தை தமிழக அரசின் தரப்பில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க: "உதயநிதி கூறியதில் தவறு இல்லை... பாஜகவை அலற விடுகிறார்" - கே.எஸ். அழகிரி கருத்து!