தமிழ்நாடு காவல் துறையில் 2011ஆம் ஆண்டுமுதல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் ராஜகுமார். இவர் 2019ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் வங்கிக் கணக்கு, சேவைப் பதிவு ஆவணங்களைத் தூத்துக்குடிக்கு மாற்றுவது குறித்து பணியாளர்கள், அலுவலர்கள் கையூட்டு கேட்டுள்ளனர். அதற்கு ராஜ்குமார் அடிபணிய மறுத்ததால் தூத்துக்குடி சென்றவுடன் தனக்குச் சம்பளம் வரவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, நான்கு மாதங்களாகத் தனக்குச் சம்பளம் வராததால் தனது உயர் அளுவலர்களிடம் கூறிவிட்டு வேலைக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. வேலைக்குச் செல்லாமல் ஓராண்டு ஆகிவிட்டதால்தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தனது குறைகளைத் தீர்க்காமலேயே பணியிடை நீக்கம்செய்வதற்கு முன்பாக தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என ராஜ்குமார் புகார் கூறுகிறார்.
இந்த நிலையில் தனக்கு நியாயம் கேட்டு ராஜ்குமார் காவல் துறைத் தலைவர், உள் துறைச் செயலர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "காவல் துறையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் உயர் அலுவலர்கள் நியாயமான கோரிக்கைகளைகூட கேட்க மறுக்கின்றனர். எனக்கு கீழ் பணியாற்றுபவர்கள் எனக்கு எதிராகச் செயல்படுகின்றனர்" என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தொழிற்சங்கம் மூலம் காவல் துறையினருக்கு ஏற்பட்டுள்ள பணி சார்ந்த அழுத்தங்களையும் குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், 1981ஆம் ஆண்டு காவல் துறை-பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்பட தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்த பிறகும் நடைமுறைக்கு வரவில்லை எனச் சுட்டிக்காட்டிய ராஜ்குமார், காவல் துறையில் சங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் காரணமாக 55 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!