கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த வேலூர் முதன்மை சார்பு நீதிபதி ஏ.எஸ்.ராஜா தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களை கடவுளை கண்டேன்! புத்துயிர் பெற்றேன்! என பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், "கோவிட் -2019 இன்றைய உலகை தன் இஷ்டம்போல் லாவகமாக புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும், ஒரு விநோத வைரஸ் கிருமி என்பது அனைவருக்கும் தெரிந்த மறுக்கமுடியாத உண்மை!
நான் வேலூரில் முதன்மை சார்பு நீதிபதியாக பணிபுரிகிறேன் என் பெயர் ஏ.எஸ். ராஜா. நானும் கோவிட் -2019 என்ற வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டேன். கரோனா என்னை பற்றிக்கொண்டதா? அல்லது கரோனா என்னைப் பற்றிக்கொள்ள நான் அனுமதித்தேனா? என்று எனக்கே புரியவில்லை.
ஆம் செப்டம்பர் மூன்றாம் தேதி முதல் 3 நாள்கள் கடும் காய்ச்சல் ,இருமல். ஏற்கனவே 3 முறை நெகட்டிவ் என்பதால் அலட்சியமாக இருந்தேன். செப்டம்பர் ஏழாம் தேதி அன்று இரவு 8 மணி , எனக்கு இயல்பாக மூச்சுவிட இயலாத நிலை ஏற்பட்டது. எட்டாம் தேதி அன்று காலை சிஎம்சி அல்லது வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள முடிவு செய்து வீட்டிலேயே நேரத்தை போக்கி கொண்டிருந்தேன்.
எட்டாம் தேதி காலை ஒன்பது மணி அளவில் வேலூரில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது மூச்சு விடுவதில் இருந்த சிரமம் ஏற்பட்டு சரியாகப் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். நான் நீதித்துறையைச் சார்ந்தவர் என்பதால் நான் விரும்பும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வசதி எனக்கு உள்ளது. நான் செய்யும் மருத்துவ செலவுகள் முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். என் மீது அன்பும் பாசமும் கொண்ட என் சொந்தங்கள் சென்னையில் உள்ள மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
நான் நீதித்துறையில் சேர்ந்த முதல் நாளிலிருந்து நோய்வாய்ப்படும்போது நான் பணிபுரியும் இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை வழக்கமாக கொண்டவன். எனவே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது என்று நானாகவே முடிவு செய்தேன். எனது மனைவியிடம் கைப்பேசியை கொடுத்து சென்னையிலுள்ள சகோதர நீதிபதி ரமேஷ் தொடர்பு கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு கண்ணயர்ந்து உறங்கிவிட்டேன்.
நான் காரில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு எனக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருந்தார்கள்.
பகல் 11 மணி 20 நிமிடத்திற்கு நான் மருத்துவமனையை அடைந்தேன். காரில் அமர்ந்தபடி கண்களை திறந்து பார்த்தேன். மிக பிரமாண்டமான கட்டடம் என் கண்கள் முன்பு தெரிந்தது.
என்னை காரில் இருந்து இறக்கிய செவிலியர்கள் என்னை பற்றிய முழு குறிப்பை பதிவு செய்து கொண்டு என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். என்னை சிடி ஸ்கேன் பரிசோதனை, ஸ்வாப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.
அடுத்த இருபது நிமிடத்தில் மருத்துவ அறிக்கை பெறப்பட்டது. என் நுரையீரலில் 30 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் உடனடியாக உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பதற்றத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டேன். என் மனைவி எனக்கு ஆறுதலான வார்த்தைகள் கூறி என்னை தேற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மிக திறமையான மருத்துவர்கள் சுஜாதா, ஜூடி ஆகியோர்கள் அடங்கிய மருத்துவ குழு மூலம் எனக்கு தனியார் மருத்துவமனையைவிட மிகச்சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டது.
மருத்துவர்கள் என்னை தினமும் இரண்டு முறை சந்தித்து அவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகள் குறித்து எனக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மருந்தோடு தைரியத்தையும் கலந்து அளித்தார்கள்.
மருத்துவர்களின் திறன்மிக்க சிகிச்சைமுறை, காலம் தவறாத உணவு, கஷாயம், ஆலோசனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைக்கு செல்லும் மாற்று யோசனை இருந்தால் அதை கைவிடுமாறும் எனக்கு மிகச் சரியான சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும் கூறி ஆச்சரியமூட்டினர்.
அண்ணா உங்களுக்கு ஒன்றும் இல்லை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் நீங்கள் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவீர்கள் என்று செவிலியர்கள், என் உடன்பிறவா சகோதரிகளின் கனிவான பேச்சுக்கள் அவர்களது 24 மணி நேர சேவைகள் பிரமிக்க வைத்தன. ஒவ்வொரு நாளும் என் உடல் முன்னேற்றத்தினை விளக்கி உற்சாகமூட்டி வந்தார்கள்.
தினமும் கபசுரக் குடிநீர் ,நிலவேம்பு குடிநீர், ஆடாதோடா குடிநீர், லெமன் டீ, கஞ்சி போன்ற நான்கு சூடான பானங்கள் மூன்று வேளைகளும் சென்னையில் மிகச்சிறந்த உணவகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தரமான உணவுகள் மூலம் என் உடலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தினர்.
சிகிச்சையின்போது அதிநவீன மருத்துவ கருவிகள் மிகச்சிறந்த விலை உயர்ந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதைக் அறிந்தேன். அதிவசதி கொண்ட கட்டில், சுகாதாரமான கழிப்பறை அனைவருக்கும் வழங்கப்பட்டது. மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் தினமும் சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைக்கப்பட்டிருந்தது.
ஒரு அரசு மருத்துவமனையில் எனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை நடைமுறைகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இவ்வகை சிகிச்சை, உணவு, கஷாயம், அக்கறை நான் நீதிபதி என்பதால் மட்டும் வழங்கப்பட்டதாக நினைத்துவிடாதீர்கள். இதே சிகிச்சை சாதாரண குடிமக்களுக்கும் பாமரனுக்கும் வழங்கப்பட்டதை கண்டேன்.
கரோனா பாசிட்டிவ் என்றாலும் 60 வயது கடந்து இருந்தாலும் அவர்களை அன்போடு கண்டிப்போடு கட்டாயம் உள்நோயாளியாக சேரவேண்டும் என்று கவனித்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம், பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள் என் அன்பு காட்டிய போதும் இது அரசு மருத்துவமனைதானா? என ஆச்சரியப்பட வைத்தது.
செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் எனக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளித்து புத்துயிர் வழங்கப்பட்டது. 24ஆம் தேதி அன்று மாலை நான் முழு உடல் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
கொடிய நோய்க்கு பயப்படாமல் தங்கள் உயிரை துச்சமென கருதி தங்கள் குடும்பத்தை மறந்து நேர்மையாக கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரியும் செவிலியர்கள் என் கண்களுக்கு கடவுளாக தென்பட்டார்கள். பின்னர் வெளியில் வந்து மருத்துவமனை கட்டடத்தை பார்த்தேன். அது ஒரு நடமாடும் கடவுள்கள் நிறைந்த ஒரு ஆலயமாக தெரிந்தது.
இக்கொடுமையான கரோனா காலத்தில் தன் உயிரைத் துச்சமென மதித்து மக்களுக்கு சேவை செய்யும் ஒவ்வொரு மருத்துவரின் கடமை உணர்ச்சியை இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் வாழ்த்துவோம்! போற்றுவோம்! பாராட்டுவோம்!
கடவுளை கண்டேன்! புத்துயிர் பெற்றேன்!" என குறிப்பிட்டுள்ளார்.