கரோனா தொற்று பரவல் உச்சத்திலிருக்கும் இன்றைய சூழ்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வரும் நாள்களில் நோயின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், கரோனா அதிகம் பாதித்துள்ள நகரங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை ஒன்றை நடத்தி உள்ளனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி, “அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால் அப்போது பள்ளிகளைத் திறந்தால் நோய் பரவல் கைமீறிச் சென்றுவிடும். பத்து வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு வரவழைத்தால், சமூக இடைவெளியைப் பின்பற்றச் சொல்வது கடினம்.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களைக் குறைக்க வேண்டும். நாடு முழுவதும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வசதி பெறக்கூடிய நிலை உள்ளதால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிப்பது சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவழைத்து பாடங்களில் உள்ள சந்தேகங்களைத் தீர்ப்பது, வீடுகளில் இருந்தவாறே பெற்றோர் உதவியுடன் பாடங்களைக் கற்பிப்பதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
தற்போதைய நிலையில், கல்விக் கட்டணத்தைக் குறைக்க இயலாது 80 சதவீத மாணவர்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியர்களின் ஊதியத்திற்கு செல்வதால் அதற்கு சாத்தியமில்லை” போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிஎஸ்பிபி, டிஏவி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.