செங்கல்பட்டு : வண்டலூரில் புகழ்பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. கடந்த வாரம் இங்கு வசித்து வந்த விஷ்ணு என்ற ஆண் சிங்கம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயா என்ற 17 வயதான சிறுத்தையும் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளது. உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, வரும் 31ஆம் தேதி வரை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விலங்குகளுக்கு தொற்று பரவாமல் இருக்க தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் போது, இரும்பு கூண்டு பழுதடைந்ததால் ஜெயா என்ற 17 வயது சிறுத்தை பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடர்ந்து விலங்குகள் இறந்து வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து பூங்காவின் உயர் அலுவலர்களை பலமுறை தொடர்பு கொண்ட போதும் விடுப்பில் இருப்பதாகவும் வெளியில் இருப்பதாகவும் பொறுப்பற்ற வகையில் தொடர்ந்து பதில் அளித்து வருகின்றனர்.
இத்தகைய அலட்சிய போக்கினை அலுவலர்கள் கைவிட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வனச்சரகர், வனக் காப்பாளர்கள், உயிரியல் பூங்காவின் இயக்குனர் போன்ற அலுவலர்கள் யாருமே, உயிரியல் பூங்கா குறித்த தகவல்களுக்கு பதில் அளிக்காமல் ரகசியம் காப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஒரு சில உயர் அதிகாரிகள், எப்பொழுது தொடர்பு கொண்டாலும் வெளியில் இருப்பதாகவும் விடுமுறையில் இருப்பதாகவும் கூறிவருவது, இவர்கள் ஒழுங்காகப் பணி செய்கின்றனரா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க : 2 மாதமாக சிக்காத சிறுத்தை.. வனத்துறையினர் விரித்த வலையில் சிக்குமா?