இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கைகளைக் காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காகத் தேசிய ‘இ-விதான்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேரவை மின்-ஆளுமை என்றால்:
பேரவை மின் ஆளுமைத் திட்டம் மூலமாக, பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும் காகிதம் இல்லாமல் மாற்றப்படும். கோப்புகளிலிருந்து தொடங்கி சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் ஆவணங்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் வடிவிலேயே இருக்கும். அதாவது மின்னஞ்சல் அல்லது செயலி வழியாக அனுப்பப்படும்.
சட்டப்பேரவை மின்ஆளுமைத் திட்டத்தின் மூலம், பாரம்பரியமிக்க சட்டப்பேரவை மண்டபமும் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. பேரவை மண்டபத்தில் மிகப்பெரிய டிஜிட்டல் திரைகள், ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கு முன்பாக தொடு திரை வசதியுடன் கூடிய திரைகள், கையடக்கக் கணினி என பல்வேறு வசதிகள் பேரவை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் திட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பேரவை மின் ஆளுமை (இ-விதான்) திட்டத்தைச் செயல்படுத்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் கூடுதல் செயலாளர் அந்தஸ்திலானவா் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு டெல்லியில் ஏற்கெனவே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. .
இதையடுத்து, மாநில சட்டப் பேரவையில் உள்ள இதர அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பேரவை மின் ஆளுமைத் திட்டம் குறித்து பயிற்சி அளிக்க டெல்லியில் இருந்து உயர் அலுவலர்கள் சென்னை வந்துள்ளனர். இந்தப் பயிற்சி வகுப்புகளைப் பேரவைத் தலைவர் பி.தனபால் இன்று தொடக்கி வைத்தார்.
இதையும் படிங்க: இவர்கள் யாருடைய அடிமை என்று தெரியும்! - அதிமுகவை விளாசிய பழனியப்பன்!