சென்னை: கே.கே நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் திறப்பு விழா இன்று (நவ. 19) நடைபெற்றது. இந்த கட்டிட திறப்பு விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கரமராஜா, தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தொழில் அதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன், எம்.பி கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
மேலும், ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த வகையில், இந்த நிகழ்வில் பங்கேற்ற லெஜண்ட் சரவணன் பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கரமராஜா மேடையில் பேசும் போது, ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியே சொல்லி வரவேற்றார். ஆனால் தமிழிசையின் பெயரை மட்டும் மறந்து விட்ட நிலையில், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பேச தொடங்கிய போது குறுக்கிட்ட விக்கிரமராஜா, மீண்டும் வந்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க மறந்ததாகச் சொல்லி நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் தலைவராக இருந்த போது அவர் பற்றிய செய்தி பத்திரிகையில் வராத நாளே இருக்காது” என்றார். பின்னர், லெஜண்ட் சரவணன் மேடையில் பேசுகையில், “ வணிகர்கள் சங்க கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. வியாபாரிகளுக்கு சிறு பிரச்னை என்றாலும், விரைந்து செயல்படுபவர் விக்கரமராஜா.
எந்த நாட்டில் வியாபாரம் செழிப்பாக உள்ளதோ, அங்கு பொருளாதாரம் வலிமையாக இருக்கும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு உண்மை, கடின உழைப்பு மிக முக்கியம். இன்று பொழுது போக்கில் சினிமா துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் காக்கா, கழுகு கதைகள். அவருக்கு இந்த பட்டம், இவருக்கு இந்த பட்டம் என்று சொல்வதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.
நாம் உழைத்தால் மட்டும் தான் உயர முடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும். அன்பால் இணைந்து செயல்படுவோம்” என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெஜண்ட் சரவணன், அடுத்த ஆண்டு ஜனவரியில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துச் சென்றார்.
இதையும் படிங்க: சாத்தான்குளத்தில் தொடர் கனமழை: சரிந்த டிரான்ஸ்பார்மர்கள்.. மின் வாரிய ஊழியர்கள் அலட்சியம் என மக்கள் புகார்!