சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று, துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடிகளுக்கான ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். அதேபோல், 15 விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசியினை அவர் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு மானிய விலையில் செயற்கைகோள் கைப்பேசி வழங்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும். திருவொற்றியூரில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய துறைமுகம் காட்டப்படும். இதனால் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
அகில இந்திய மருத்துவ படிப்பில் தமிழ்நாடு ஒபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டே கிடைப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா அமலாக்க தொடர்ச்சியாக ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பதும் தங்கள் அரசு தான்.
இந்த விவகாரத்தில் நல்ல முடிவு வரவுள்ள நிலையில் அது தொடர்பாக போராட்டம் நடத்தி, தங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பெயரை திமுக தலைவர் ஸ்டாலின் தடுக்கிறார். எங்களுக்கு தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம். அதிகாரம் முக்கியமல்ல. திமுகவுக்கு அதிகாரம் தான் முக்கியம்.
திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட கூடாது என்பதால் குஷ்பு கைது செய்யப்பட்டார்'' என்றார்.
இதையும் படிங்க: சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குக - பிரியங்கா காந்தி