தமிழகத்தில் மொத்தம் 149 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 108 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் ஊதியம் வழங்கி வருகிறது. மீதமுள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக இருந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்ட 41 அரசு கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே, பணியாற்றக்கூடிய ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.
அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமாக 20000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கி வருகிறது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பரமக்குடி உறுப்பு கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் ஆசிரியர் பணியாளர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமே தனது நிதியில் வழங்க தமிழக உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனாலும் அழகப்பா பல்கலைக்கழகம் பரமக்குடி அரசு கல்லூரியில் பணியாற்றும் 22 கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பணியாற்றக்கூடிய ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்க வில்லை. ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் இது சம்பந்தமாக பல்கலைக்கழகத்திற்கு பலமுறை கோரிக்கை அளிக்கப்பட்டது.
அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதன் காரணமாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பாக 16.11.2021 புகார் மனு அனுப்பப்பட்டது. இதனை ஆராய்ந்த தேசிய மனித உரிமை ஆணையம் 1.12.2021 தாமாக முன்வந்து வழக்கை ( case number 3091/22/30/2021) எடுத்துள்ளது.
இதையும் படிங்க :தமிழ்நாட்டில் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன்