தேர்தல் ஆணையத்தில் அமமுக பதிவு பெற்றதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அதிகாரவர்கத்தின் அத்தனை இடையூறுகளையும் தாண்டி கடந்த 6ஆம் தேதி பதிவுபெற்ற அரசியல் கட்சியாக அமமுக உருவாகியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எங்கள் கட்சியை பதிவு செய்ய மறுத்து நிராகரித்தது.
ஆணையர் பழனிச்சாமி எங்களுக்கு பொது சின்னம் கொடுக்க மறுத்தார். பின்னர் சட்டப் போராட்டம் நடத்தினோம். தற்போது தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு பெற்றிருந்தாலும் அதற்கான உத்தரவை இன்னும் வழங்கவில்லை. கட்சி பதிவு என்பது சாதாரண விஷயம் அதைக்கூட கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் மறுத்தார்கள்.
நீண்ட சோதனைகளைத் தாண்டி பெற்றதால்தான் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள். இனி இந்த பழனிசாமி அரசு கும்பலுக்கு தக்க பாடம் புகட்டுவோம். மதசார்பற்ற நாடு என்பதால் இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களும் பாதிபின்றி குடியேற்ற சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் மத்திய அரசு தாயுள்ளத்துடன் அணுக வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்' என தெரிவித்தார்.