“மத்திய அரசு நீட் சட்டத்தைத் திருப்பி அனுப்பியும் - அது நிராகரிக்கப்படவில்லை” என்று மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுவது கேலிக்கூத்தாக இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வானூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் பிரபு கல் குவாரியை ஏலத்தில் எடுக்கக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. சட்டப்புலி மு.க.ஸ்டாலின் நுனிப்புல் மேயாமல் ஆவணங்களைக் கவனமாகப் படிக்க வேண்டும்” என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பொது ஊழியர்கள்” குறித்து ஊழல் தடுப்புச் சட்டமும், இந்தியத் தண்டனைச் சட்டமும் என்ன சொல்கிறது? அவர்கள் என்ன செய்யக்கூடாது என்று கூறுகிறது என்பதைக் கூட அமைச்சர் தெரிந்து கொள்ளவில்லை. அந்த அளவிற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் ஊழல் என்ற கனமழையில் இன்றைக்கு நனைந்து கொண்டிருக்கிறார்.
“என் சம்பந்தி டெண்டர் எடுக்கக் கூடாது “ என்று எந்த விதி சொல்கிறது எனக் கேள்வி கேட்கும் முதலமைச்சர் உள்ள மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும்.
டான்சி வழக்கில், “அரசு நிலத்தை முதலமைச்சர் வாங்கியதில் என்ன தவறு? என்று குதர்க்கமான வாதத்தை முன் வைத்தார்கள். அதையும் மீறித்தான் கீழமை நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாருக்குச் சிறைத் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் கூட அந்த அம்மையார் அரசிடமிருந்து வாங்கிய “டான்சி நிலத்தை” திருப்பிக் கொடுத்து தான் தப்பித்தார்.
“பொது ஊழியரின் உறவினர் டெண்டர் எடுக்கக்கூடாது என்று ஏதும் விதி இல்லை” என்று உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில்தான் 4000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் குவாரிகள் - அரசின் சொத்து. அதை தன் இஷ்டத்திற்கு அமைச்சர் தன் கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. ஊழல் வெட்கமறியாது என்பதற்கு இந்திய நாட்டில் ஒரே எடுத்துக்காட்டாக விளங்குவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவை தான்.
திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து விட்டு - அமைச்சர் ஒருவர் தன் சொந்தக்கட்சி எம்.எல்.ஏ.வின் மகனுக்கு அரசு குவாரியை அடிமாட்டு விலைக்குக் கொடுப்பது முறையா? அது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமாக வருமா வராதா என்று ஆத்ம பரிசோதனை செய்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.