சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கோவிட் பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணைய வழி வகுப்புகள் மூலமாக மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றிட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கருக்கு பிப்ரவரி 2021 முதல் மே 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி இணைய சேவை பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் வழங்கிடும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அதன் அடையாளமாக, 9 மாணாக்கருக்கு விலையில்லா தரவு அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் முனைவர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.