சென்னை: தமிழ்நாட்டில் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு அரசு, தனியார் துறையில் வேலைக்கு அமர்த்த உதவுவதற்காக, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவலர் நலப்பிரிவு சார்பில், 'காவல் பணியாளர்களின் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்' என்ற பெயரில் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
காவலர் நலத் துறை மூலம் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தத் தனிப்பிரிவை உருவாக்கியதன் மூலம் அவர்களின் குழந்தைகள் வேலைவாய்ப்பின்றி மன அழுத்தத்தில் இருப்பதையும், தங்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேடுவதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதுமே முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள், தனியார் துறையின் வேலைவாய்ப்பு தகவல்களை காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்குத் தெரிவித்து அவர்கள் தகுந்த வேலைவாய்ப்பைப் பெற உதவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு அனைத்து காவல் பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் விருப்பமுள்ள குழந்தைகளின் விவரங்களைச் சேகரித்து வரும் 25ஆம் தேதிக்கு முன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறு காவல் துறை தலைமை இயக்குநர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு