சென்னை: புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பி பெற்றுக் கொள்வதாக கடந்த மே மாதம் அறிவித்தது. மக்களிடம் இருக்கும் பணத்தை வங்கி மூலமாக மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி அவகாசம் கொடுத்த நாள் இன்றுடன் (அக் 7) முடிவடைகிறது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016இல் அறிவிக்கப்பட்ட நிலையில், பணப்புழக்கத்தை அதிகரிக்க 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த மே மாதம் 2,000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
பின்னர், இந்தியா முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி கடைதி நாள் என கால அவகாசத்தை நீட்டித்தது. எனவே, ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அதனை மாற்றுவதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், நேற்று (அக் 6) மும்பையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் சந்திப்பில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19-ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் ரூ.3.42 லட்சம் கோடி நோட்டுகள் கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி வரை திரும்பப் பெற்றப்பட்டன.
நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, தற்போது வரை திரும்பப் பெறப்பட்ட ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக் கணக்குகளில் வைப்பு வைக்கப்பட்டது. மற்றவை வங்கிகளில் பணமாக மாற்றிக் கொள்ளப்பட்டது. ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா வழக்கு; இஎஸ்ஐ நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!