சென்னை: தமிழ்நாட்டில் 12,000 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இருப்பினும், பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிகமான பள்ளிகளை பல்வேறு நகரங்களில் நடத்தி வருகின்றன. அவற்றில் பல பள்ளிகள் அரசின் அனுமதி இல்லாமல் இயங்குவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிய வந்தது.
குறிப்பாக சிபிஎஸ்இ, இன்டர்நேஷனல் பள்ளிகள் மற்றும் ஐசிஎஸ்சி பள்ளிகள் போன்றவற்றை தொடங்குவதற்கு தடையின்மை சான்று தமிழ்நாடு அரசிடம் இருந்து பெற வேண்டும். அவ்வாறு பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து ஒரு பள்ளியின் பெயரில் தடையின்மைச் சான்று பெற்றுவிட்டு, அந்தப் பள்ளியின் கிளை பள்ளிகளாக பல நகரங்களில் அதே பெயரில் பள்ளியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் பிற தேர்வு வாரியங்களில் மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும்போது, எந்த பள்ளியின் இருப்பிட பெயரில் அங்கீகாரம் பெற்றுள்ளதோ, அந்த பள்ளியில் இருந்து மாணவர்களை தேர்வு எழுத வைக்கின்றனர். ஆனால், பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குறிப்பிட்ட பள்ளியில் மட்டுமே படிக்கின்றனர் என்பது மட்டுமே தெரியும்.
இதன் மூலம் அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததும், மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து தேர்வு எழுத முடியாது என்பதும் மறைக்கப்பட்டு வருகிறது. அதனை விசாரணை செய்தபோது, ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்று விட்டு, பல பள்ளிகளை அங்கீகாரம் இல்லாமல் நடத்துவதும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு பள்ளியில் படிப்பதாக தேர்வு எழுத வைப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே தனியார் பள்ளிகளின் இந்த முறைகேடுகள் குறித்து கல்வித்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 162 பள்ளிகள் முறையான அனுமதி இன்றி இயங்கி வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்தப் பள்ளிகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "புதுமைப் பெண்" திட்டம் - 2ஆம் கட்டமாக முதலமைச்சர் நாளை தொடங்கி வைப்பு!