சென்னை: அம்பத்தூர் புதுத்தகரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனக்குச் சொந்தமான 1800 சதுர அடி கொண்ட இடத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஹரிகோபால் என்பவர் போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, அயனாவரத்தைச் சேர்ந்த முரளி என்பவரை உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து பலரது நிலங்களை அபகரித்தது தெரியவந்தது.
குறிப்பாக வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 1800 சதுர அடி நிலம், அம்பத்தூர் ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் நகரை சேர்ந்த புனிதவதிக்கு சொந்தமான 2400 சதுர அடி நிலம், வெற்றி நகர் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணனுக்கு சொந்தமான 1800 சதுர அடி நிலம் என இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை அபகரித்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் தொடர்ந்து நில அபகரிப்பில் ஈடுபட்டுவந்த ஹரி கோபால், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட முரளி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு: 7 பேர் கைது