சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவருக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் புழல் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். இலாகா இல்லாத அமைச்சராக தற்போது செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர். குறிப்பாக செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து, கடந்த 3ஆம் தேதி திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர், நெருக்கமானோர் சாமி நாதன் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான எஸ்டி சாமிநாதன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக எஸ்டி சாமிநாதன் முறைகேடான ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்ததனைகள் தொடர்பான ஆவணங்கள் பொருள்கள் மறைத்து வைத்துள்ளதாக ரகசிய தகவல்கள் அமலாக்க துறைக்கு கிடைத்துள்ளது. எஸ்டி சாமிநாதன் வீட்டிலிருந்து மிகப் பெரிய பையில் முறைகேடான ஆவணங்கள் மற்றும் விலை மதிப்புடைய பொருள்கள் மறைத்து அவரது உறவினரான சாந்தி என்பவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் சாந்தியின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்டபோது சாந்தி வீட்டில் இல்லை. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாந்தி வீட்டில் இருந்த சில பொருள்கள் அவரது ஓட்டுநர் சிவா கையில் ஒப்படைக்கப்பட்டது பதிவாகியிருந்தது. அதன் பின் ஓட்டுநர் சிவா வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது சோதனை நடந்த நேரத்தில் சிவா தலைமறைவாக இருப்பதும் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக எஸ்டி சாமிநாதனின் பினாமியாக அவரது உறவினர் சாந்தி இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஓட்டுநர் சிவா வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது 22 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 16.6 லட்சம் ரூபாய் விலை மதிப்புடைய பொருள்கள் மற்றும் விவரிக்க முடியாத 60 நிலம் தொடர்பான சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சாந்தி வேலை எதுவும் பார்க்காமல் வீட்டை மட்டும் நிர்வகித்து வருபவர். எந்தவித வருமானமும் சாந்திக்கு தனிப்பட்ட முறையில் கிடையாது. இதனை அடிப்படையாக வைத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்கள் ஆவணங்கள் குறித்து விசாரித்த போது சாந்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
ஆனால் அமலாக்கத்துறையினர், ஓட்டுநர் சிவாவை பிடித்து வாக்குமூலத்தை வாங்கியுள்ளனர். அப்போது செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான எஸ்டி சாமிநாதனின் பினாமி சாந்தி மறைத்து வைப்பதற்காக கொடுத்தார் என ஓட்டுநர் சிவா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்களுக்கு உண்டான தகுந்த விளக்கங்களை சமர்பிக்குமாறு அவர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மேகதாது நில அளவைப் பணியை நிறுத்தாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் - இபிஎஸ்