கடனை திருப்பி செலுத்தவில்லை என அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் மற்றும் அவரது மனைவி சோனியாவை அரும்பாக்கம் போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கிருந்து சோனியாவை அடகுக்கடைக்கு அழைத்து சென்று, அவரது தாலிச்சங்கிலியை அடகு வைத்து 1.50 லட்சம் ரூபாயை பெற்று, புகார்தாரருக்கு போலீசார் கொடுத்து விட்டு, சோனியாவை விடுவித்தனர்.
இந்த வழக்கில் சோனியாவும், அவரது கணவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, தாலிச்சங்கிலியை அடகு வைத்து விவரம் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வாளரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி ஆஜராகி, கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு குறித்து விசாரித்த ஆய்வாளர் ரேணுகாதேவி மீது இரண்டு வாரங்களில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி, நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய துணை ஆணையருக்கு உத்தரவிட்டார்