உள்ளாட்சித் துறையில் பல்வேறு பிரிவினருக்கும் ஏற்றதுபோல குறைந்த பட்ச ஊதியத்தை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும் முறை தமிழ்நாட்டில் உள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் குழு ஒன்றை அமைக்கும் உத்தரவை தொழிலாளர் நலத்துறை பிறப்பித்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராகத் தொழிலாளர் துறை இணை ஆணையரும் செயலராக செயலாக்க பிரிவு உதவி ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை ராசு, இந்திய தொழிற்சங்க மையத்தைச் சேர்ந்த கணேஷன், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஜெயச்சந்திரன் ஆகியோர் தொழிலாளர் தரப்புப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் தனலட்சுமி, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் ராஜ ஸ்ரீ, சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி ஆகியோர் வேலையளிப்போர்களின் தரப்புப் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் பயிற்சி பெறாதவர்கள், ஓரளவு பயிற்சி பெற்றவர்கள், பயிற்சி பெற்றவர்கள் ஆகிய மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தக் குழுவானது தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியங்களைத் திருத்தி அமைப்பது தொடர்பாக விசாரணை நடத்தி, பின் அரசுக்கு ஆலோசனை வழங்கும். இதைத் தொடர்ந்து வரைவு ஊதியங்கள் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்து கேட்கப்படும். தொடர்ந்து இறுதி ஊதியம் தொடர்பான முழுமையான தகவல் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் அறிக்கையாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மணமக்களிடம் கையெழுத்து பெற்ற மு.க. ஸ்டாலின்!