தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீசியன்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோபிநாதன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”கரோனா பரிசோதனைக்கு தொண்டை, மூக்குப் பகுதிகளில் இருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, உலக சுகாதார அமைப்பும் மத்திய அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளது.
மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை வழங்குவது மட்டுமே லேப் டெக்னீசியன்களின் பணியாகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றாமல் லேப் டெக்னீசியன்கள் மூலமாகவே மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள லேப் டெக்னீசியன்கள், உடற்கூறியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை செய்யக்கூடாது என விதிகள் உள்ளன.
கரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கும் லேப் டெக்னீசியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.
எனவே மாதிரிகள் எடுக்க வகுக்கப்பட்ட விதிமுறைகளை, தமிழ்நாட்டில் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். லேப் டெக்னீசியன்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்,
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களுக்கு தகுதி உள்ளது என்றும் கடமையை செய்வதில் இருந்து அவர்கள் தவறுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ”மத்திய அரசு விதிகளின்படி, கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்தக் கூடாது. தகுதியில்லாத நபர்களைக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யலாமா? இ.என்.டி மருத்துவ மேற்படிப்பு நிபுணர்கள் தான் தகுதியானவர்கள் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகளை விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை மறுநாள் ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க : சட்டத்தை மதிக்காமல் தூத்துக்குடி சென்றுள்ளார் உதயநிதி - அமைச்சர் ஜெயக்குமார்