சென்னை: பாரதிய ஜன சங்க நிறுவனர் டாக்டர்.ஷாம் பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆளுநர் உரை முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டும் உரையாக இருந்தது. இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும், கேஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை குறித்து பேசப்படவில்லை.
திமுக அரசு வந்து 40 நாள் ஆகியுள்ளது. ஆனால் கமிட்டி அமைப்பதை மட்டுமே செய்து வருகின்றனர். நீட் தேர்வு குறித்து ஆராய அமைத்துள்ள கமிட்டி தேவையில்லாத ஒன்று. இதனை கலைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை குழப்பாமல், அவர்களை தயார் படுத்துங்கள்.
அணில்களால் தான் மின் துண்டிப்பு ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஊரடங்கில் பல நிறுவனங்களும் செயல்படாமல் இருக்கும் நிலையில், ஏன் மின்வெட்டு இருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் வியாபாரி தாக்கப்பட்டு உயரிழந்த விவகாரத்தில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட கூடாது. இந்திய அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடாத வகையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்" என்றார்.
மேலும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டால் பாஜக ஏன் பதறுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் ஏன் பதற வேண்டும்,
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதே தவறானது. தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா?" என எல்.முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒன்றிய அரசு' எனும் சொல்லாடலைத் தான் தொடர்ந்து பயன்படுத்துவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்