சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (102), உடல் நலக் குறைவால் நவம்பர் 15 அன்று உயிரிழந்தார். அவரின் உடலுக்கு முதலமைச்சர் உள்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேரில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்துத்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, “மறைந்த சங்கரய்யா தமிழகத்தில் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரராக கடைசி வரை கொள்கை பிடிப்புடன் இருந்தவர். தனது இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் கொள்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவக்கம்.. வானவேடிக்கையில் ஜொலித்த அண்ணாமலையார் கோயில்!
அனைத்து தரப்பு மக்களும் மிகப்பெரிய மதிப்பை வைத்திருக்கும் வகையில், அரசியல் தலைவராக அவர் இருந்தார். சிறு வயது முதல் ஏ.பி.வி.பி இயக்கத்தில் இருந்தாலும், சங்கரய்யா மீது பெரும் மதிப்பு எனக்கு உண்டு. சங்கரய்யாவின் சமூக பங்களிப்பு மிக முக்கியமானது. சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை இருந்த நிலையில், தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்தவர்.
அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையான அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டால், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவர்” என்றார். பாரத ரத்னா விருது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், விருதுகள் அனைத்துக்கும் சில நடைமுறைகள் உள்ளன. பாரத ரத்னா விருது குறித்து அவர் குடும்பத்துடன் இணைந்து நடவடிக்கை எடுப்போம். அவருடைய சேவைகளை நாம் நிச்சயம் போற்ற வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2 நாட்களாகியும் பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேக்கம்.. பயணிகள் அவதி!