சென்னை: பாஜகவில் இணைந்த குஷ்பூ இன்று பாஜக அலுவலகம் கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலரவேண்டும். இன்றும் நான் பெரியாரிஸ்ட்தான். காங்கிரஸ் கட்சியில் என்னை அவமதித்தார்கள். அதன் காரணமாகவே கட்சியிலிருந்து விலகினேன்.
வேளாண்மை மசோதா உட்பட அனைத்தும் கொண்டு வந்தது காங்கிரஸ், ஆனால், அதனை நிறைவேற்றியது பாஜக. பாஜக எதைச் செய்தாலும் எதிர்ப்பதே வேலையாக காங்கிரஸ் வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்கள் மீதுள்ள குறைகளை மறைக்கப்பார்க்கிறார்கள்.
பிரதமர் மோடி முத்தலாக் சட்டம் கொண்டு வந்தபோதும், புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்ததையும் ஆதரித்தேன். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் வெறுமனே எதிர்ப்பதை மட்டும் வேலையாகச் செய்யக்கூடாது. இன்று காங்கிரஸ் எதிர்க்கக்கூடிய திட்டங்கள் அனைத்தும் கடந்த காலத்தில் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான். இன்று பாஜக நிறைவற்றும்போது அதனை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது?
வெறும் நடிகையாகதான் பார்த்தோம் என்றும், கணவரின் அழுத்தத்தால்தான் குஷ்பூ வெளியே சென்றார் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறுகிறார்கள். அதிலிருந்தே அவர்களுடைய சிந்தனை எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பது புலப்படுகிறது. சுயமாக சிந்தித்து பேசுவதை காங்கிரஸ் விரும்புவதில்லை. மூளைச்சலவை செய்து என்னை பாஜகவுக்கு அழைத்துவரவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் உண்மை பேச சுதந்திரம் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: பாஜக பக்கம் ஒதுங்கிய திரை கலைஞர்களின் பட்டியல்