சென்னை: இதுதொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன்னர், ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்திவந்ததோடு, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், பொதுமக்களிடம் அதிகளவு கட்டணத்தை வசூலித்து வந்தனர்.
இக்குறைபாட்டினைக் களையும் பொருட்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதரத்தை கருத்தில்கொண்டு குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டுவருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அரசு இ-சேவை மையங்களை நிறுவி அதன்மூலம் இணையச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கிவருகிறது.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி முதல் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்தப்பதவியில், குறிஞ்சி என். சிவகுமாரை நியமித்து இன்று(ஜூலை 7) ஆணை வெளியிட்டுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி என். சிவகுமார் கட்டுமானப் பொறியாளராவர்.
இவர், ஏற்கெனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் சங்க மாநிலத் துணைத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஈரோடு மாவட்டத்தில் அரிமா சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றிவருகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் பாஜக கல்யாணராமன் மீது விசிக புகார்