சென்னை: இதுதொடர்பாக கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் தமிழ்நாடு அரசுக்கு விடுத்திருந்த கோரிக்கையில், “தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் - களஞ்சியம் என்ற புத்தகத்தில் வெளியான கலைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் நிலவும் 100 நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிப்போரும், பயிற்சி பெற்று கலைகளை நிகழ்த்துபவர்களும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம் என ஆணை வெளியிடப்பபட்டது.
கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்பட்டு வந்த குறவன் - குறத்தி ஆட்டம், நாளடைவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், இந்த ஆட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும், இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக அறிய வருகிறது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கலைப்பட்டியலில் இந்த கலை இடம் பெற்றிருந்தாலும், இக்கலைப் பிரிவில் உறுப்பினராக இதுவரை எவரும் பதிவு செய்யவில்லை.
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை வாயிலாக, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள குறவன் - குறத்தி ஆட்டம் என்ற இக்கலைப்பிரிவை நீக்கம் செய்து ஆணை வெளியிட வேண்டும். அதேநேரம் கரகாட்டம் உள்பட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து ஆணை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலை பண்பாட்டுத் துறை இயக்குநரின் கருத்துருவினை தமிழ்நாடு அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்புரையினை செயல்படுத்திடும் விதமாகவும், தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் கொறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கையின் அடிப்படையிலும், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை வாயிலாக, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40இல் இடம் பெற்றுள்ள ‘குறவன் - குறத்தி ஆட்டம்’ என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு ஆணையிடுகிறது. மேலும், கரகாட்டம் என்ற பெயரிலும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்தும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவினை செயல்படுத்திடுமாறும், குறவன் - குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளிலும் நடைபெறவில்லை என்பதை உறுதிபடுத்திடுமாறும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில், “தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களில் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் இடம் பெற அனுமதி தரக் கூடாது.
அதேநேரம் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் இடம் பெற்றது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மற்றும் மலைவாழ் மக்களின் சமூக பெயர்களில் எந்த வித நடன நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 139 அரசுப்பள்ளிகள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு