காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குமரி அனந்தன் நிறுத்தப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அழுக்குப்படாதவர் என அனைவராலும் மதிக்கப்படும் மூத்த தலைவர் குமரிஅனந்தன் ஆவார். 1980 காலககட்டத்தில் குமரிஅனந்தனின் பேச்சை கேட்பதற்கு மாணவர்கள் முதல் அனைவரும் மிகுந்த ஆர்வத்தால் கூடுவார்கள். மேலும் குமரி அனந்தன் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தவர். அதே காலகட்டத்தில் குமரிஆனந்தன், காந்தி காமராஜர் தேசிய கட்சி என்று தனிக்கட்சி தொடங்கி, எம்.ஜி.ஆர் உடன் கூட்டணி வைத்து ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றவர் என்ற வரலாறு உள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்த போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு முறை பதவி வகித்துள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் குமரி அனந்தனுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
குறிப்பாக குமரிஅனந்தனின் மகள் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி குமரிஅனந்தனுக்கு என்ன செய்தது? போன்ற கடுமையான விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சி மேல் வைக்கப்பட்டன. மேலும் காங்கிரஸ் கட்சி குமரிஅனந்தனுக்கு ஏதும் செய்யவில்லை என்றுதான் தமிழிசை பாஜகவில் இணைந்தார் போன்ற பேச்சுகளும் நிலவின. அதோடு குமரிஅனந்தனை நாங்குநேரி இடைத்தேர்தலில் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் நாடார் சமுதாயம் மத்தியில் காங்கிரஸ் செல்வாக்கு உயர்வதோடு தொகுதியில், வெற்றி பெறுவதும் எளிதாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.
மேலும் குமரிஅனந்தனை வேட்பாளராக நிறுத்தாமல் இருக்க வயது மட்டும் தான் ஒரே தடையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாங்குநேரி தொகுதியில் குமரிஅனந்தன் தவிர வேறு எந்த வேட்பாளரைக் காங்கிரஸ் நிறுத்தினாலும் தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை குமரி அனந்தன் நிறுத்தப்படவில்லை என்றால், அதிமுக தன் முழு பலத்தைப் பயன்படுத்தி நாங்குநேரி தொகுதியை எளிதாகக் கைப்பற்றிவிடும் என்றும் கூறப்படுகிறது.
நாங்குநேரியில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் - திருநாவுக்கரசர்