திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.க செல்வம் ஆகஸ்ட் 4ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்து பேசினார். அடுத்த நாள் கமலாலயத்தில் நடைபெற்ற ராமர் பூஜையில் காவி துண்டு அணிந்து பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர் கு.க செல்வம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதால் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதோடு, ஏன் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அறிவிப்பு வெளியிட்டுருந்தார்.
இந்த அறிக்கைக்கு எம்எல்ஏ கு.க. செல்வம் தனது அறிக்கை மூலம் தெரிவித்ததாவது; “எனது தரப்பு பதிலைக் கேட்காமலே ஒருதலைபட்சமாக தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கியது இயற்கை நீதிக்கு எதிரானது. திமுக தங்களின் தற்காலிக நீக்கத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விளக்கம் அளிக்க எனக்கு இன்னும் விவரங்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு திமுகவினர் மற்ற கட்சி தொண்டர்களையும் தலைவர்களையும் சந்திக்கக்கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதுதான் பேரறிஞர் அண்ணா அவர்களது கோட்பாடு. நான் கட்சியின் மாண்பை மீறியதாக கூறுவது இயற்கை நீதிக்கு விரோதமானது என கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது' - கு.க. செல்வம்