சென்னை: செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தாம்பரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் கே.எஸ் அழகிரி கூறியதாவது, "காங்கிரஸ் மற்றும் தங்களது கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பிருக்கிறது. எனவே மகத்தான வெற்றி கிடைக்கும்.
கூட்டணி என்று வந்துவிட்டால் அனைத்து இடங்களிலும் நிற்க முடியாது. களத்தில் இறங்கி வேலை செய்யும் பொழுது அது சரியாகிவிடும். தமிழ்நாடு அரசு தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
திமுகவின் நான்கு மாதம் ஆட்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க ஒன்று" என்றார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்தனர். ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'