சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி, நிமிடத்திற்கு நிமிடம் உறுதி செய்யப்படுகிறது. எங்கள் கூட்டணி கட்சிகள் எங்களோடு இணைந்து சிறப்பாக செயல்படுகிறார்கள்.
வரும் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நான் பரப்புரை செய்யவுள்ளேன். 15ஆம் தேதி காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரப்புரை செய்ய இருக்கிறார். தொடர்ந்து 24, 25ஆகிய தேதிகளில் முதலமைச்சர் பரப்புரை செய்யவுள்ளார். ஈரோடு தேர்தலில் அதிமுக, முறைப்படி வாசனுக்கு அந்த இடத்தை தந்திருக்க வேண்டும்.
நாங்கள் கொள்கை ரீதியாக கூட்டணியில் இருப்பதால் எங்களுக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுவரை பாஜக தலைவர் அல்லது பிரதமர் பங்குசந்தை வீழ்ச்சி குறித்து எதுவும் பேசவில்லை. குறிப்பிட்ட நிறுவனத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் பங்குகள் வீழ்ந்துள்ளது. அதற்கு பின் உள்ளதை மத்திய அரசும், பிரதமரும் பதில் சொல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் இந்த பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்த விமர்சனம் கடுமையாக எழுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் முடிவடையக் கூடிய ரயில்வே திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில், ஒன்று கூட தமிழ்நாட்டிற்கு இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீரான வளர்ச்சி வேண்டும். 2030ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இல்லை என்பதற்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அந்தியோதியா ரயில் ஆரம்பித்தோம். தமிழ்நாட்டில் அது சிறப்பாக செயல்படவில்லை. நீண்ட தொலைதூரத்திற்கும் இன்னொரு அந்தியோதயா ரயிலை தெற்கு ரயில்வே அறிவிக்கலாம். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. விரைவு வண்டிகளில் கூடுதலாக அன் ரிசர்வ் கோச்களை சேர்க்கலாம். அனைத்திலும் தென்னிந்தியா முழுவதும் புறக்கணிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை 2028ஆம் ஆண்டில் தான் நிறைவுபெற வாய்ப்புள்ளது என்று ஜப்பான் சென்று வந்த மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில், எய்ம்ஸ் தாமதப்படுவது ஏன்? பாஜகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு செய்வது குறைவு, விமர்சிப்பது அதிகம். தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு பாஜக தலைவரும் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் அடைவது குறித்து போராட்டம் நடத்தலாமே?.
தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை அதிகமாக உள்ளது. பட்டியலின பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்; அவர்களின் ஏழு விழுக்காடு பேர் தான் தண்டிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரமற்ற கருத்துகளை ஆளுநர் சொல்கிறார். தீண்டாமை, நாடு முழுவதும் உள்ளது. நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. நாங்கள் தான் ஆதிதிராவிடரை உள்துறை அமைச்சர், இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பில் வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் தீண்டத்தகாதவர்களின் நிலைமை மோசமாக உள்ளது என்று கொடூரமான குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார், ஆளுநர். தீண்டாமைக்கு அடிப்படை பாஜக, ஆர்எஸ்எஸ் தான். நீங்கள் தான் தீண்டாமையை நியாயப்படுத்துகிறீர்கள்,
சங்கராச்சாரியார் இடத்தில் பட்டியலினத்தவர் அமர முடியுமா?. அதனை எதிர்த்து போராடியவர்களை பார்த்து குற்றம் சொல்வது என்ன பொருள்.
நீங்கள் யார்? அதை சொல்ல நீங்கள் இருப்பதிலேயே மோசமானவர்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பை கட்டிக் காப்பவர்கள் நீங்கள் தான்.
இந்த அரசு தீண்டாமைக்கு எதிராக உள்ளது. கலைஞர் ஒரு பட்டியலின பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்டுள்ளார். காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு வரி விலக்கு கொடுத்தீர்கள். அந்த பேராண்மையுடனும், துணிவுடனும் பிபிசி ஆவணப்படத்தை ஏன் வெளியிடவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “உயிருடன் இருந்தால் நல்லது தான், அவர் உயிருடன் இருப்பது தெரிந்தால் நானே நேரில் போய் பார்க்கிறேன்” எனப் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்